A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Thursday, November 22, 2012

கல்லறைகூட உமக்கில்லை


விருந்துண்ணும் வயதினிலே-சயனற்

மருந்துண்டு வீழ்ந்தவரே

மானமுள்ள தமிழர் நீர்

போற்றுகிறோம் நாமுமை

 

தொல்லை வேணாம் என்று

தொலைதேசம் நாம் ஓட

எல்லையில் நின்று வீழ்ந்தீரே

போற்றுகிறோம் நாமுமை

 

வெட்டுப்புள்ளி கண்டும் நாம்

வெட்கமற்று வந்தோமிங்கே

வெட்டும் புலியாய் பாய்ந்தவரே

போற்றுகிறோம் நாமுமை

 

குடியேற்றக் கொடுமை கண்டும்-நாம்

குடியேறி இங்கே குதூகலிக்க

கொடுமையென்று மறுதலித்து எழுந்தவரே

போற்றுகிறோம் நாமுமை

 

தேசப் பற்றாளராய்-நாமிங்கே

கோஷமிட்டு வேசமிட

பாசப் பற்றறுத்து வீழ்ந்தீரே

போற்றுகிறோம் நாமுமை

 

கட்டிலுண்டு தொட்டிலுண்டு –நமக்கு

கல்வியுடன் கறன்சி நோட்டுமுண்டு

கல்லறை கூட உமக்கில்லை

போற்றுகிறோம் நாமுமை

 

கல்லறைதான் உமக்கில்லை-நல்லோர்

நெஞ்சறையில் நீக்கமற நிறைந்திருப்பீர்

சில்லறைநாம் செய்பிழையை பொறுத்தருளும்

போற்றுகிறோம் நாமுமை

 

உங்கள் நேரத்திற்கு நன்றி

அன்புடன், .பகீரதன்

No comments:

Post a Comment