A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Sunday, November 25, 2012

களமும் காதலும்


அம்மி மிதிக்கும் வயதில்

விம்மி வெடித்தீர்

கும்மி அடிக்கும் பருவத்தில்

குப்பி கடித்தீர்

 

கல்வி கற்கும் வயதில்

சொல்லி அடித்தீர்

செல்வி கலையும் பருவத்தில்

வேள்வி வளர்த்தீர்

 

முத்தங்கள் தொடுக்கும் வயதில்

யுத்தங்கள் தொடுத்தீர்

அர்த்தங்கள் புரியும் பருவத்தில்

அனர்த்தங்கள் தடுத்தீர்

 

பெண்ணைக் காதலிப்பதே

பேருவகை என அவன் நினைக்க

மண்ணைக் காதலிக்கும்

மகத்துவத்தை போதித்தீர்

 

இடுப்புவலி அடுப்புவழி தொடரும்பழி

அதுவே பெண்ணென அவன் நினைக்க

கரும்புலி கருணைமொழி காக்கும்விழி

அதுவே பெண்ணென நிரூபித்தீர்

 

அடிமைப்பூ அழுமூஞ்சி அருளிக்கொட்டை

அதுவே பெண்ணென அவன் நினைக்க

விடுதலைப்புலி உரிமைக்குரல் சயனற்வில்லை

அதுவே பெண்ணென சாதித்தீர்

 

வெள்ளியும் செவ்வாயும்

விரதமிருந்த பெண்டீர்-எமக்காய்

கொள்ளியும் கொலையும் எடுத்தீரே

எண்ணியும் வணங்கியும் உமைவாழ்த்துறோம்

 

ஈழத்து நிலமெல்லாம் நீ

பூவாய் மலரும்

தாயகத்து தாயிடத்தே நீ

சேயாய் வளரும்

 

உங்கள் நேரத்திற்கு  நன்றி

அன்புடன்,  .பகீரதன்

No comments:

Post a Comment