A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Tuesday, November 27, 2012

இயங்க மறுக்காதா எங்கள் இதயம்



இன்று,

கார்முகிலைக் காணாமலே

கானமயில் தோகை விரித்து ஆடும்

விடியமுன்பே சாமத்து சேவல்கள்

மாவீரா எனக் கூவும்.

 

இன்று,

பிடிபட்ட மானை கைவிட்ட புலி

வேட்டையாட வந்தவனுக்கு

தன்னை விருந்தாக்கி விழும்

 

இன்று,

கோயில்மணி  ஓங்கி  அடித்தும்

கோபுரத்தில் இருந்த பறவைகள்

எழுந்து பறவாமல் அச்சமின்றி  அங்கிருக்கும்

 

இன்று,

தேவியரோ கூந்தல் முடித்திழுத்து

முற்றத்தில் கோலமிட்டு

வீரருக்காய் தீபமேற்றி வணங்குவர்

 

இன்று,

பூசாரி தமிழில் மந்திரம் சொல்லுவான்

இஸ்லாமியன் பள்ளிக்கு ஆறுதடவை செல்வான்

தேவாலயத்தில் மெழுகுவர்த்திகள் நீண்டெரியும்

 

இன்று

அரசியல்வாதி இன்றாவது

நல்லது செய்ய எண்ணுவான்

காமடியனும் கண்ணீர் வடிப்பான்

கொடுங்கோலனும் பூமரங்களிற்கு தண்ணீர் அடிப்பான்

 

இன்று,

கவிஞன் கண்ணீரை மையாக்கி

கற்பனையின்றி கவி வடிப்பான்

எழுத்தாளன் வரலாற்றை எழுதியும் அழித்தும்

அழித்தும் எழுதியும் தடுமாறுவான்

 

இன்று,

தாயொருத்தி

கோப்பாய் மாவீரர் மயானத்தில்

இடிந்த கல்லறையிடையே இடிந்து போய் கிடப்பாள்

 

இன்று,

ஏதிலியாய் இறந்துபோன

கிருஷாந்தியும் தர்ஷினியும்

வீரத்தாயின் கருவறையில் கருத்தரிப்பர்

 

இன்று,

இரக்கமற்ற யமனுக்கு

ஆயிரம் பத்தினிகள் சாபமிடுவர்

தேவர்கள் எதிராய் வழக்குத் தொடுப்பர்

 

இன்று

ஐநாவில் அமைதிக்காக

போலிக் கூட்டம் வைப்பார்கள்

முள்ளிவாய்க்காலில் மரங்கள்

மீண்டும் தளிர்க்கத் தொடங்கும்

 

வீடுகளில் எல்லாம்  இன்று விளக்கானீர்

விடுதலைக்கு  ஒளியேற்றியதால்

விரும்பி வணங்குகிறோம்  உமை

 

உங்கள் நேரத்திற்கு  நன்றி

அன்புடன்,  .பகீரதன்

No comments:

Post a Comment